ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில் ரூ.1¼ கோடி கொள்ளை; 4 பேர் கைது 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில்  ரூ.1¼ கோடி கொள்ளை; 4 பேர் கைது 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Nov 2021 3:21 AM IST (Updated: 12 Nov 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஏ.டி.எம். மையங்களில் நடந்த ரூ.1¼ கோடி கொள்ளை சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு
ஈரோட்டில்  ஏ.டி.எம். மையங்களில் நடந்த ரூ.1¼ கோடி கொள்ளை சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.1¼ கோடி கொள்ளை
ஈரோடு மாநகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில், 7 ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்தினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
இதற்கிடையில், ஈரோட்டில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தை போலவே, சேலம் மாவட்டம் சங்ககிரியில் கடந்த மாதம் 17-ந்தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மர்ம கும்பல் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பூபாலன் (வயது 25), ஜெகதீஸ் (27), முகமது ரியாஸ் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 பேர் கைது
இதில் பூபாலன், ஈரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், இதன் மூலம் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து பணத்தை கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பூபாலன் கொடுத்த தகவலின்பேரில், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஈரோடு ஏ.டி.எம்.களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பூபாலனின் கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27), ஆண்டிகாட்டை சேர்ந்த கேசவன் (24), வெடியரசம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (24), திருச்செங்கோட்டை சேர்ந்த குமார் (27) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 More update

Next Story