நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி


நீட் தேர்வை ஒழிப்பதே  தி.மு.க.வின் முழு முதல் கொள்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2021 3:40 AM IST (Updated: 12 Nov 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

நம்பியூர்
நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
முப்பெரும் விழா
நம்பியூரில் திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திருப்பூர் சுப்பராயன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு கற்போம் பெரியாரியம் என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினர். திராவிடர் கழக துணைத்தலைவர் கலிபூங்குன்றன் நீட் தேர்வை ஏன் அழிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.
சமூக நீதிக்கு எதிரானது 
இதையொட்டி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வு என்பது கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது ஆகும். நகர்ப்புற மாணவர்கள் பயிற்சி வகுப்புக்கு சென்று தேர்ச்சி பெறமுடியும். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு அது சாத்தியமில்லை. சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரானது ‘நீட்’ தேர்வு ஆகும். மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு சேர்த்தது மத்திய அரசுக்கு ஆதரவான திட்டமாக உள்ளது. கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை மறுக்கின்ற சூழலை ஏற்படுத்தும் என்பதால் தான் தொடர்ந்து தி.மு.க. போராடி வருகிறது.
முழு முதல் கொள்கை
‘நீட்’ தேர்வை ஒழிப்பது தான் தி.மு.க.வின் முழு முதல் கொள்கையாக உள்ளது. செம்மொழி நூலகம் அமைப்பதற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட பின் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவர் விடுதியிலும் செம்மொழி நூலகம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 
இதைத்தொடர்ந்து பெரியார் படிப்பகத்துக்கு புத்தகம் வாங்க ரூ.1 லட்சத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நன்கொடை வழங்கினார்.
முன்னதாக பெரியார் நினைவு படிப்பகத்தை தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு அங்கு கொடியேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், நம்பியூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மெடிக்கல் ப.செந்தில்குமார், வக்கீல் சென்னியப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story