ஈரோடு மாவட்டத்தில் மழை முன்எச்சரிக்கை பணிகள் தீவிரம்; பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் மழை முன் எச்சரிக்கை பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மழை முன் எச்சரிக்கை பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை
தமிழ்நாடு முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றன. இதுபோல் தமிழகம் முழுவதும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று பள்ளி- கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு இருந்தார்.
ஏமாற்றம்
நேற்றுக்காலையில் இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த தகவல் மாணவ-மாணவிகளை சென்று சேர தாமதமானது. இதற்கிடையே அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தகவல் சென்று சேராததால் பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டு வந்தனர். பள்ளிக்கூடங்களுக்கு வந்த பிறகே விடுமுறை தகவல் தெரிந்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
ஆனால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்யவில்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் அவ்வப்போது பன்னீர் தெளித்தது போன்று மழைத்துளிகள் விழுந்தன.
முன் எச்சரிக்கை பணிகள்
இருப்பினும், ஈரோடு மாவட்டத்தில் எதிர்பாராத வகையில் மழை பெய்தால் அதனால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆற்றங்கரைகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அந்தந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
சேறும் -சகதியுமான ரோடு
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்தமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரைப்பகுதி ரோடு சேறும்- சகதியுமாக மாறி உள்ளது. இங்கு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதுபோல் குமலன் குட்டை அம்பாள் ஆட்டோஸ் அருகே பாதாள சாக்கடை கழிவு தேங்கி இருப்பதால் வாகனங்கள் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. நேற்று இங்கு விபத்து ஏற்பட்டு முதியவர் ஒருவர் காயம் அடைந்தார். இதுபோல் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் பல இடங்களில் ரோடுகள் சேறும்- சகதியுமாக மாறி உள்ளன. இவற்றை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story