கோவையில் கற்றல் திறனாய்வு தேர்வை 7500 மாணவர்கள் எழுதினர்


கோவையில் கற்றல் திறனாய்வு தேர்வை 7500 மாணவர்கள் எழுதினர்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:35 PM IST (Updated: 12 Nov 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கற்றல் திறனாய்வு தேர்வை 7500 மாணவர்கள் எழுதினர்

கோவை

தேசிய கற்றல் திறனாய்வு தேர்வை கோவையில் 7,500 மாணவ -மாணவிகள் எழுதினர்.

கற்றல் திறனாய்வு தேர்வு

தேசிய அளவில் குழந்தைகளின் வயதுக்கேற்ப, அவர்களின் கற்றல் திறனை அறியும் வகையில் கற்றல் திறனாய்வு தேர்வு தேசிய அளவில் நடந்தது.

 கோவை மாவட்டத்தில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பிரசன்டேஷன் பள்ளி உள்பட 208 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

3 மற்றும் 5-ம் வகுப்புக்கு காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணி வரையும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரையும் இந்த தேர்வு நடந்தது. 

7,500 மாணவர்கள் எழுதினர் 

இதில் மொத்தம் 7,500 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் இந்த தேர்வை எழுதினர். இதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

 கொரோனா வழிகாட்டு நெறி முறைகளின்படி மாணவ- மாணவிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து எழுதினர்.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-
தேசிய கற்றல் திறனாய்வு தேர்வுக்கு ரேண்டம் முறையில் பள்ளி கள், வகுப்புகள் தேர்வு செய்யப்படும். இந்த முறை 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்டது.

 3 மற்றும் 5-ம் வகுப்பு களுக்கு மொழிப்பாடம், கணிதத்தேர்வு ஆகிய பாடங்களில் இருந்தும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு அனைத்து பாடங்கள் மற்றும் பொது அறிவியல் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. 

தேர்வு கண்காணிப்பாளர்கள் 

இந்த தேர்வு எழுதும் மாணவர்களை அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடியாது. தேர்வு எழுத அரசு வழிகாட்டுதல்படி, தேர்வு கண்காணிப்பாளர்களே மாணவர்களை தேர்வு செய்வார்கள். 8-ம் வகுப்புக்கு 60 மதிப்பெண்களுக்கும், 10-ம் வகுப்புக்கு 70 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடந்தது. 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story