குடிநீர் வினியோகத்தில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை
குடிநீர் வினியோகத்தில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
குடிநீர் வினியோகத்தில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வுக்கூட்டம்
சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் மதுபாலன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்கள் புகார்
இதில் ஊரக வளர்ச்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரடியாக பொதுமக்களிடம் கேட்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு தினமும் வர வேண்டிய 22 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வராமல் 14 லட்சம் லிட்டருக்கு குறைவாகவே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் புகார் தெரிவித்தனர்.
அதேபோல் முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கும் போதுமான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். மேலும் சென்னிமலையில் உள்ள கருப்பணன் கோவில் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, ‘பொதுமக்களின் அனைத்து அடிப்படை பிரச்சினைகளும் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வினியோகத்தில் மெத்தன போக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் சி.பிரபு, பேரூர் செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, ஒன்றியக்குழு துணை தலைவர் கே.பன்னீர்செல்வம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாசங்கர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணபதி சுந்தரம், ஜோதி பாக்கியம், பேரூராட்சி செயல் அலுவலர் அ.ஆயிஷா, ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ, அ.பரமேஷ்வரன், நடராஜ், ஒன்றிய இளைஞர் அணி தி.மு.க. நிர்வாகிகள் கொடுமணல் கோபால், சதீஸ் என்கிற சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story