ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச்செல்கின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பர்கூர், தாளவாடி, ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்தாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினந்தோறும் 30 முதல் 35 டன் வரை காய்கறிகளும், 8 முதல் 10 டன் வரை தக்காளியும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வரத்து குறைவு
தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தற்போது 3 டன் முதல் 5 டன் வரை தக்காளியும், 10 டன் முதல் 15 டன் வரை காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகள் வரத்து குறைந்ததன் காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விலை உயர்வு காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரி பி.பி.கே.மணிகண்டன் கூறும்போது, ‘தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்துள்ளது.
விலை விவரம்
தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகள் விலை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். மழை பொழிவு நின்றுவிட்டால் காய்கறிகள் வரத்து அதிகமாகி விலை குறைய வாய்ப்பு உள்ளது’ என்றார். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
தக்காளி -ரூ.80, கத்தரிக்காய் -ரூ.80, வெண்டைக்காய் -ரூ.80, அவரைக்காய் -ரூ.60, மிளகாய் -ரூ.25, கேரட் -ரூ.65, பீன்ஸ் -ரூ.85, ஊட்டி பீட்ரூட் -ரூ.80, தாளவாடி பீட்ரூட் ரூ.70. முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15 வரையும், வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story