டைரக்டர் பா.ரஞ்சித் மீதான அவதூறு வழக்கு ரத்து


டைரக்டர் பா.ரஞ்சித் மீதான அவதூறு வழக்கு ரத்து
x
தினத்தந்தி 13 Nov 2021 12:54 AM IST (Updated: 13 Nov 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் பா.ரஞ்சித் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 
டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று தகவல்கள் குறித்து பேசினேன். குறிப்பாக, டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் பாரூக் எழுதிய செந்தமிழ் நாட்டு சேரிகள் எனும் புத்தகத்தில் கூறப்பட்டு இருந்ததை மேற்கோள்காட்டி பேசினேன்.
பல்வேறு வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களைத்தான் நான் அந்த கூட்டத்தில் பேசினேன். இந்த தகவலை மற்றவர்களும் பேசியுள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமுதாயத்திற்கும் எதிராக அமையவில்லை. இதுதொடர்பாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பா.ரஞ்சித் மீதான அவதூறு வழக்கில் இறுதி அறிக்கையை கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசாருக்கு தடை விதித்தது. மேலும், ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்ததுடன், பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது. இந்தநிலையில் நேற்று டைரக்டர் பா.ரஞ்சித் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

Next Story