கொரோனா சிறப்பு மருத்துவமனை இடமாற்றம்


கொரோனா சிறப்பு மருத்துவமனை இடமாற்றம்
x
தினத்தந்தி 12 Nov 2021 7:46 PM GMT (Updated: 12 Nov 2021 7:46 PM GMT)

சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை, 
சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் செயல்பட்டு வந்த கொரோனா சிறப்பு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நவீன பிரிவுகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் எதிரே, மருத்துவ கல்லூரி மைதானத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு, மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரப்பை அறுவை சிகிச்சை துறை என 7 உயிர்காக்கும் நவீன பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
 இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூலம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஏராளமான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை அதிகரிக்க தொடங்கி காலத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனையானது, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. 
பாதிப்பு குறைவு
இதனால், அங்கு செயல்பட்டு வந்த உயிர் காக்கும் துறைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே, தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப் படியாக குறைந்து வருகிறது. மதுரையிலும் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் படுக்கைகள் காலியாகின. 
எனவே, அங்கு செயல்பட்டு வந்த, கொரோனா வார்டுகளை இடமாற்றம் செய்ய மருத்துவமனை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, கொரோனா உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு அரசு ஆஸ்பத்திரியின் பழைய மகப்பேறு கட்டிடத்தில் 13-ந்தேதி (இன்று) முதல் படிப்படியாக 3 நாட்களுக்குள் மாற்றப்படும் என டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

Next Story