பெரியார் பஸ்நிலைய பணிகளை முடிக்காதது ஏன்?


பெரியார் பஸ்நிலைய பணிகளை முடிக்காதது ஏன்?
x
தினத்தந்தி 13 Nov 2021 2:24 AM IST (Updated: 13 Nov 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பஸ்நிலைய பணிகளை முடிக்காதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை, 
பெரியார் பஸ்நிலைய பணிகளை முடிக்காதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அவமதிப்பு வழக்கு
மதுரை அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்த சர்க்கரை முகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. ரூ.159 கோடியே 70 லட்சம் மதிப் பீட்டில் மதுரை பெரியார் பஸ்நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டருக்கு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது 18 மாதத்தில் இந்த பஸ்நிலைய கட்டுமான பணிகளை முடிக்க ஒப்பந்தமானது.
ஆனால் தற்போது வரை பஸ்நிலைய கட்டுமானப்பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால் டவுன் பஸ்கள் சாலை களிலேயே நிறுத்தப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக பெரியார் பஸ்நிலைய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் வெயில், மழையில் நின்று அவதிப்படுகின்றனர்.
வழக்கு
குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் செய்யப் படவில்லை. இதனால் பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் சிரமப்படுகின்றனர். உரிய வசதிகள் செய்யவும், பஸ்நிலைய கட்டுமானப்பணிகளை விரைவில் முடிக்கவும் உத்தரவிடும்படி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது, இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை பின்பற்றி பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றாத பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஒத்தி வைப்பு
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே கோர்ட்டு விதித்த கெடு முடிந்து 9 மாதங்கள் ஆகியும், இதுவரை பணிகள் நிறைவேற்றப்படாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இது குறித்து மதுரை மாநகராட்சி தரப்பு வக்கீல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story