தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்விளக்குகள் தேவை
மதுரை ஜெய்ஹிந்புரம், ஜீவாநகர் 2-வது தெருவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் பல மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருள்சூழ்ந்து உள்ளதால் இரவுநேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவும், போதிய மின்விளக்குகள் பொருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, ஜீவாநகர்.
சாலை தேவை
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா பி.புதுப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையானது மண் சாலையாக உள்ளது. மழைக்காலத்தில் இந்த வழியாக வாகனங்களும், பொதுமக்களும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பி.புதுப்பட்டி.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் கால்நடை ஆஸ்பத்திரி மேல்புறம் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் பி.பீ.குளம் சுந்தரபாண்டி தெருவில் தெருவிளக்குகள் சில எரியாமல் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண்களும், சிறுவர், சிறுமிகளும் இரவு நேரத்தில் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் மின்வாரியத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பி.பீ.குளம்.
சேறும், சகதியுமான சாலை
மதுரை மாநகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட புதுவிளாங்குடி செம்பருத்தி நகர், ரோஸ்கார்டன், பொற்றாமரை நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மழையால் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. சாலை முழுவதும் சகதியாக மாறியதால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்கள் நலன்கருதி இந்தசாலையை சீர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், பொற்றாமரைநகர்.
ஆபத்தான மின்கம்பங்கள்
சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை சண்முகநாதபுரம் கிராமத்தில் மின்கம்பங்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளன. மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே, ஆபத்தான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், தேவகோட்டை.
விபத்து அபாயம்
மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான பாதாள சாக்கடை கால்வாய் மூடியை சரிசெய்ய வேண்டும்.
-சிவா, மதுரை.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோனார்் குடியிருப்பு, தேவகோட்டை செல்லும் சாலை, பள்ளி வாசல் சாைல பகுதியில் பாதாள சாக்கடை பணி காரணமாக சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-துரைக்கண்ணு, காரைக்குடி.
அடிப்படை வசதிகள் தேவை
மதுரை தாமரைப்பட்டி பாறை தெருவில் சாலை மற்றும் சாக்கடை வசதிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பார்களா?
-பொதுமக்கள், தாமரைப்பட்டி.
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் தெருவில் செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-கணேஷ், பரமக்குடி.
மின்விளக்கு வேண்டும்
மதுரை மாவட்டம் சிலைமானில் இருந்து சக்கிமங்கலத்தை இணைக்கும் வைகை ஆற்று மேம்பாலத்தில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் அவ்வழியே செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.
-ஜெகத்ரன், கீழடி.
Related Tags :
Next Story