தாளவாடி பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது
தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் ராகி பயிர் சேதமடைந்தது.
தாளவாடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. மேலும் 100 ஏக்கர் பரப்பளவில் ராகி பயிர் சேதமடைந்தது.
காட்டாற்று வெள்ளம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் தாளவாடியை அடுத்த சிக்கள்ளி, பாலப்படுக்கை, இக்களூர் மற்றும் வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.
இதனால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதில் 3 கிராமங்களில் உள்ள தோட்டங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள ராகி பயிர்கள் சாய்ந்து நாசம் ஆனது. மேலும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக பஸ், கார், சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. ரோட்டில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மழை நீர் வடிந்த பிறகே வாகனங்கள் தரைப்பாலத்தை கடந்து சென்றன. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் பாலப்படுக்கை அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றன. இதனால் வேலை மற்றும் வெளியூர் சென்றிருந்த பாலப்படு்கை கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மழை வெள்ளம் வடிந்த பிறகே மக்கள் தங்கள் ஊருக்கு சென்றனர்.
தாளவாடி
அதே போல் நேற்று மாலை 6 மணி முதல் தாளவாடி, கும்டாபுரம், திகினாரை, ஜீர்கள்ளி மற்றும் வனப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இந்த மழை நீர் அனைத்தும் கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்றது. எனவே மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தியூர்
அத்தாணி, ஆப்பக்கூடல், நகலூர், பெருமாபாளையம், செல்லம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.
பர்கூர் மலைப்பகுதியிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி பர்கூர் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி 17.5 அடி உயரமுடைய கெட்டிசமுத்திரம் ஏரிக்கு செல்கிறது. இதனால் நேற்று முன்தினம் 14 அடி உயரம் இருந்த அந்த ஏரி நீர்மட்டம் நேற்று 14.50 அடி உயரமாக அதிகரித்து உள்ளது. இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் கெட்டிசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story