பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது


பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 13 Nov 2021 10:04 PM IST (Updated: 13 Nov 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பெருந்துறை அருகே மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்தியால் அறுத்து...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 65). 
கடந்த 31-ந் தேதி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் செல்லம்மாள், ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், செல்லம்மாளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல நடித்து, அவரது காதில் தொங்கிக்கொண்டிருந்த தங்க கம்மல்களை, கத்தியால் அறுத்து பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். 
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 
தனிப்படை
இதுகுறித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் காஞ்சிக்கோவில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 
கைது
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சித்தோடு ராயர்பாளையத்தை சேர்ந்த தொழிலாளியான தனபால் (36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘ஆடு மேய்த்துக்கொண்டிருந்த செல்லம்மாளிள் காதை அறுத்து கம்மலை பறித்து சென்றதை,’ தனபால் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனபாலை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 2 கம்மல்களையும் பறிமுதல் செய்தனர். 
மூதாட்டியின் காதை அறுத்து கம்மல்களை பறித்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாராட்டு தெரிவித்தார். 

Next Story