புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலை தேவை
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளதால் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்லும் போது சேற்றில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோவில்பாப்பாக்குடி.
அடிப்படை வசதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா டி.டி.நகர் சர்ச் 4-ம் குடியிருப்பு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுகாதார வளாகம், குடிநீர், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மகேஷ், காரைக்குடி.
நாய்கள் தொல்லை
மதுரை டி.எஸ்.பி. நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
சத்யா, மதுரை.
எரியாத தெருவிளக்கு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி 18-வது வார்டு சிலோன் காலனியில் தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், சிங்கம்புணரி.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தபுரம் பட்டாளம்மன் கோவில் பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடாக உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவார்களா?
சரவணா, பேரையூர்.
தெருவிளக்கு வேண்டும்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கைத்தறி நகர், சீனிவாச பெருமாள் நகரில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்களும், மாணவ, மாணவிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, தெருவிளக்கு அமைத்து தர வேண்டும்.
நாகராஜன், திருப்பரங்குன்றம்.
ஆபத்தான மின்கம்பம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி செல்லும் சாலையில் உள்ள சில மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகின்றன. அடிப்பகுதி முழுவதும் உடைந்து உள்ளன. இதனால் மின்கம்பங்கள் எப்போது சாய்ந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
Related Tags :
Next Story