புகாா்பெட்டி


புகாா்பெட்டி
x
தினத்தந்தி 13 Nov 2021 8:30 PM GMT (Updated: 13 Nov 2021 8:30 PM GMT)

தினத்தந்தி புகாா்பெட்டி



வடிகால்பணி முடிவது எப்போது? 

அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணி முழுமையாக நடைபெறவில்லை. கடந்த ஒரு ஆண்டாக அந்த பணி பாதியில் நிற்கிறது. எனவே அந்த பணியை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுப்பாளையம்.

  ---
  
விபத்தை தடுக்க வேண்டும்

  பெருந்துறையில் இருந்து திங்களூர் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. அந்த வழியாக வரும் லாரி டிரைவர்கள் ஓட்டலுக்கு உணவருந்த செல்கிறார்கள். அப்போது அவர்கள் சாலையோரத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் பெருந்துறையில் இருந்து திங்களூர் செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையை கடப்பதில் மிகவும் சிரமப்படுகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், திங்களூர்.
  ------
  
சாக்கடையில் தேங்கும் கழிவுகள் 

  ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே சாக்கடை செல்கிறது. இந்த சாக்கடையில் கழிவுகள் தேங்கி அடைத்து நிற்கிறது. பல ஆண்டுகளாகவே இதுபோன்றுதான் உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்தபடியே சாமி கும்பிட வேண்டிய நிலை உள்ளது. எனவே கழிவுகளை அகற்றி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  பொதுமக்கள், முனிசிபல் காலனி.
  
  
  
ஆபத்தான மின்கம்பம் 

  நம்பியூரை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள மீன்காரம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மேல் பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின் கம்பம் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும்.
  பொதுமக்கள், மீன்காரம்பாளையம்.
  
  --------
சாக்கடை அடைப்பு

  கோபிசெட்டிபாளையம் அய்யப்பா நகர் பூங்கா அருகில் உள்ள பசுமை நகரில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை அடைப்பை சரி செய்ய சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், அய்யப்பா நகர்.
  
  
சேறும், சகதியுமான ரோடு

  திண்டல் பாலாஜி கார்டன் 3-வது தெருவில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டன. பின்னர் அந்த குழிகள் மூடப்பட்டன. ஆனால் சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு தெரு குண்டும், குழியுமாக காணப்பட்டது. தற்போது பெய்த மழை காரணமாக தெரு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பாலாஜி கார்டன்.
  
  
பாராட்டு 

  ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்ட பெரியவலசு திலகர் வீதியில் சாக்கடை கழிவுகள் கடந்த பல மாதங்களாக அள்ளப்படாமல் இருந்தது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழ்புகார் பெட்டியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து திலகர் வீதிக்கு தூய்மை பணியாளர்கள் வந்து சாக்கடை கழிவுகளை அகற்றினார்கள். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  பொதுமக்கள், பெரியவலசு.
  ----------


Next Story