54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 14 Nov 2021 11:50 PM IST (Updated: 14 Nov 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரை, 
மதுரையில் 8-ம் கட்டமாக நடந்த சிறப்பு முகாம்களில் 54 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி திருவிழா
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்றும் தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது. மதுரை மாவட்டத்திலும் நேற்று 8-வது கட்டமாக 1,275 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக-நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி நேற்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தினர். 
இதுபோல், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
நேற்றுடன் மதுரையில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 36 ஆயிரத்து 263 ஆக உள்ளது.
தடுப்பூசி கையிருப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 11 ஆயிரத்து 340 தடுப்பூசிகளும், அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 300 தடுப்பூசிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 40 தடுப்பூசிகளும், மாவட்ட சுகாதார கிடங்கில் 94 ஆயிரத்து 830 தடுப்பூசிகளும் என மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 510 தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 
மதுரையில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோல், நேற்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 
சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 129 ஆக குறைந்துள்ளது. மதுரையில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

Next Story