சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்; ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,660-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,660-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூ மார்க்கெட்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் மார்க்கெட்டில் பூக்கள் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 3 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.2 ஆயிரத்து 660-க்கும், முல்லை ரூ.1,340-க்கும், காக்கடா ரூ.1,300-க்கும், செண்டுமல்லி ரூ.110-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.1,960-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டுமல்லி ரூ.89-க்கும், பட்டுப்பூ 125-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.700-ம், முல்லை ரூ.640-ம், காக்கடா ரூ.450-ம், செண்டுமல்லி ரூ.21-ம், ஜாதிமல்லி ரூ.150-ம், கனகாம்பரம் ரூ.290-ம், சம்பங்கி ரூ.110-ம், அரளி ரூ.110-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று 700 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை தூறிக்கொண்டே இருப்பதால் பூக்கள் அதிகம் விளையவில்லை. பூக்கின்ற பூக்களும் அழுகி கீழே விழுந்து விடுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து விட்டது. ஆனால் திருமணம் மற்றும் பல்வேறு விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் பூக்கள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர். இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,’ என்றனர்.
Related Tags :
Next Story