திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் உயிருடன் மீட்பு


திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 5:54 AM IST (Updated: 15 Nov 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே மாடுகளை மேய்க்கச் சென்ற முதியவர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு நேற்று காலை லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 60) என்ற முதியவர் 7 மாடுகளை மேய்க்க சென்றார்.

அப்போது ஆற்றில் குறைவான அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆற்றின் நடுவே அவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் அந்த பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது. இதனால் வெள்ளத்தின் நடுவே 7 மாடுகளும், முதியவர் விஸ்வநாதனும் சிக்கி கொண்டு தவித்தனர்.

முதியவரை மீட்டனர்

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் துணிச்சலுடன் ஆற்று வெள்ளத்தில் இறங்கி பெரும் போராட்டத்திற்கு நடுவே முதியவர் விஸ்வநாதனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

ஆனால் ஆற்றின் நடுவே மேய்ந்து கொண்டிருந்த 7 மாடுகளும் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதில், மாடுகள் மிரண்டு போனதால் அவைகளை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திரும்பி விட்டனர்.

ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தால் மட்டுமே மாடுகளை மீட்க முடியும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story