தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவர்


தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொன்ற கணவர்
x
தினத்தந்தி 15 Nov 2021 3:36 PM IST (Updated: 15 Nov 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் தாலியால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவர், தனது 3 குழந்தைகளுடன் தமைறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வாடகை வீட்டில் வசிப்பு

பூந்தமல்லி கிழக்கு மாடவீதி, ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது30). வேன் டிரைவர். இவருடைய மனைவி நந்தினி (27). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் பண்ருட்டி ஆகும். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இவர்கள் இந்த வீட்டின் மாடியில் வாடகைக்கு குடி வந்துள்ளனர். கீழ் வீட்டில் நந்தினியின் சகோதரி பவித்ரா குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நந்தினி மற்றும் அவரது குழந்தைகளை பவித்ரா கடைசியாக பார்த்துள்ளார்.

கழுத்தை இறுக்கி கொலை

நேற்று மாலை வரை நந்தினி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. வீடும் பூட்டப்பட்டு இருந்தது. பல முறை அழைத்தும் வீட்டுக்குள் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பவித்ராவும், அக்கம், பக்கத்தினரும் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பூட்டிய வீ்ட்டுக்குள் நந்தினி பிணமாக கிடந்தார். அவரது கழுத்தை தாலியால் இறுக்கியும், கட்டையால் தாக்கியும் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளுடன் தலைமறைவு

ஆனந்தராஜ், தனது 3 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர்தான் மனைவியை தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, குழந்தைகளுடன் தலைமறைவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான ஆனந்தராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டதால் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தாலியால் கழுத்தை இறுக்கியும், கட்டையால் தாக்கியும் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story