கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை பேனர்களுடன் வந்த மக்கள்
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை பேனர்களுடன் வந்த கிராம மக்கள், அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் முறையிட்டனர்.
தேனி:
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 190 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மானிய தொகையை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கம்பம் பகுதிக்குழு செயலாளர் லெனின், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘கம்பத்தில் கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிளை நூலகம் கடந்த 25 ஆண்டுகளாக அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 6,200 சந்தாதாரர்கள் மற்றும் 114 புரவலர்கள் உள்ளனர்.
54 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையமாகவும் இந்த நூலகம் செயல்படுகிறது. இந்த கட்டிடம் சேதம் அடைந்து மேற்கூரை விழும் நிலையில் உள்ளது. மழைநீர் ஒழுகும் நிலைமை உள்ளதால் புத்தகங்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், தேவைப்பட்டால் விரிவாக்க கட்டிடம் அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பகுதிநேர நூலகத்தை முழுநேர நூலகமாக செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
கோரிக்கை பேனர்கள்
அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களின் ஊருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள், பேனர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் கேட்டபோது, ‘எங்கள் ஊரில் காமராஜர் திறந்து வைத்த சமுதாயக்கூடம் பராமரிப்பு இன்றி உள்ளது. அதில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்படுகிறது. ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய் வசதி, பெண்கள் கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனுவை பதாகைகள் வடிவில் எடுத்து வந்துள்ளோம்’ என்றனர்.
பின்னர், அவர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் முரளிதரனை சந்தித்து முறையிட்டனர். ஏற்கனவே அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராமத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறிச் சென்றனர். இது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டம்
அதுபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மாதர் சங்கம் ஆகியவை சார்பில், கோவை பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், கண்மாய்களில் மீன்பிடி குத்தகை ஏலம் விடும்போது மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story