நகைக்காக பாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஈரோட்டில் நகைக்காக பாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஈரோடு
ஈரோட்டில் நகைக்காக பாட்டியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாட்டி-பேரன்
ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலை விளையாட்டு மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மனைவி கவுரி (வயது 70). கணவரை இழந்த கவுரி தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் பாண்டியன். ஆர்.என்.புதூர் அம்மன்நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
பாண்டியனுக்கு பாபு என்கிற கோபிநாத் (தற்போது வயது 37) என்ற மகன் உள்ளார். கூலித்தொழிலாளியான இவர் பாட்டி கவுரியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். பாட்டி கேட்டபோதெல்லாம் பணம் கொடுக்காததால், பாட்டி அணிந்திருந்த நகைகளின் மீது கோபிநாத் கண் வைத்தார்.
கொலை-கொள்ளை
கடந்த 6-7-2011 அன்று கோபிநாத், அவரது நண்பரான விஜயன் என்பவருடன் சேர்ந்து பெருமாள் மலையில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தார். பாட்டியிடம் நைசாக பேசிய கோபிநாத், பெருமாள் மலை பகுதியில் உள்ள கியாஸ் நிறுவனம் பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து சொந்த பாட்டி என்றும் பார்க்காமல் கவுரியை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 8½ பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடினார். இதுபற்றி சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, பாபு என்கிற கோபிநாத், விஜயன் ஆகியோரை கைது செய்தனர். கோபிநாத் பாட்டியிடம் இருந்து கொள்ளையடித்த நகைகளையும் போலீசார் மீட்டனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் முன்னாள் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆகி வாதாடினார். வழக்கு விசாரணையை முடித்து நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட பாபு என்கிற கோபிநாத், தனது பாட்டி கவுரியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராததொகை செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக 10 ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
பரபரப்பு
இந்த ஜெயில் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார். இதனால் கோபிநாத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சொந்த பாட்டியை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீர்ப்பின் போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள அரசு வக்கீல் ஜெயந்தி உடன் இருந்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஜயன் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story