பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு


பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2021 2:58 AM IST (Updated: 16 Nov 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அந்தியூர்
பர்கூர் மலைப்பாதையில் 4-வது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 
தொடர் மழை
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ், வேன், கார், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் மலைப்பகுதியில் உள்ள 33 கிராம மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைக்காக அந்தியூர் வந்துவிட்டு மீண்டும் தங்கள் கிராமத்துக்கு பர்கூர் மலைப்பாதை வழியாக செல்வார்கள்.
பர்கூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செட்டி நொடி, நெய்கரையில் கடந்த 10 நாட்களில் 3 முறை மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
4-வது முறையாக...
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் 4-வது முறையாக செட்டி நொடி என்ற இடத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மலைப்பாதையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மண்சரிவை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பர்கூர் மலைப்பகுதியில் இருந்து அந்தியூர் வாரச்சந்தைக்கு பல்வேறு வகையான பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் விற்பனைக்காக கொண்டு வந்தவர்கள் மீண்டும் திரும்பி போக முடியாமல் தவித்தனர்.
தவிப்பு
மேலும் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் பணி முடிந்து மீண்டும் அந்தியூர் வரமுடியாமல் மலை கிராமத்திலேயே தவித்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் பர்கூர் மலைப்பாதையை விரைந்து சரி செய்து போக்குவரத்து சீராக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story