சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும்- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோடு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
பணிகள் தொடக்க விழா
ஈரோடு திண்டல் சக்தி நகரில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் சக்தி நகர், லட்சுமி நகர் பகுதியில் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் ரூ.21 கோடியே 20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, தார் சாலை மற்றும் பூங்காக்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
ஆய்வு
இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சுற்றி தேங்கிநிற்கும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளது. அப்போது கட்டிடங்கள் பழுதடைதிருப்பது தெரியவந்தால் உடனடியாக சீரமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிவரும் 2 ஆண்டுகளில் இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர், அரசுடன் இணைந்து செயல்பட்டால் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூர்வாரும் பணி
இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு திண்டல் புதுக்காலனி பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியையும், திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அத்தியாவசிய பொருட்களையும் ஆய்வு செய்தார்.
இதில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயலட்சுமி, தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர் சின்னையன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story