தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது; குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி வேதனை


தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது; குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி வேதனை
x
தினத்தந்தி 16 Nov 2021 3:30 PM IST (Updated: 16 Nov 2021 3:30 PM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யாதது மனஉளைச்சலாக உள்ளது என்று குழந்தைகள் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு சிறுமி கூறினார்.


சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் கார் டிரைவரான கற்பகக்கனி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கடையில் முதல் கணவருக்கு பிறந்த தனது 13 வயது மகளுக்கு தனது 2-வது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் கற்பகக்கனியை கைது செய்யவில்லை என கடந்த செப்டம்பர் மாதம் கமிஷனர் அலுவலகத்தில் அந்த பெண் மீண்டும் புகார் கொடுத்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்ய மகளிர் போலீசார் பணம் கேட்டதாகவும், என்னிடம் பணம் இல்லாததால் போலீஸ் நிலைய கழிவறையை 3 நாட்கள் சுத்தம் செய்ய வைத்ததாகவும் பரபரப்பு புகாரை கூறி இருந்தார்.

இந்தநிலையில் கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பாலியல் தொடர்பாக சந்தேகம் இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண் ‘1098’ என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை அறிந்த 13 வயது சிறுமி, அவசர உதவி எண் ‘1098’-க்கு போன் செய்து, “எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த எனது தாயின் 2-வது கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யாததால் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாக” கூறினார். இதுகுறித்து சிறுமி பேசிய 19 நிமிட ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story