கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர் போராட்டம்
ஆந்திராவிலிருந்து தரமற்ற எம்-சாண்ட் மணல்களை கொண்டு வருவதை தடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர் போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று அனைத்து எம்-சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், புகார் மனு ஒன்றை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீசிடம் அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமானங்கள் பாலங்கள் சிதைந்து பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் புளியந்தோப்பு கே.பி.பார்க் மற்றும் கே.கே.நகர், ராமபுரம் போன்ற அரசு குடியிருப்புகளில் அனைத்து சுவர்களும் விரல் பட்டாலே பெயர்ந்து வரக்கூடிய நிலையில் உள்ளது.
மேற்கண்ட கட்டுமானப் பணிகள் அனைத்தும் தரமற்ற எம்-சாண்ட் மணல் மூலம் கட்டப்பட்டது. இந்த தரமற்ற எம்-சாண்ட் மணல் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவை ஆகும்.
எம்-சாண்ட் மணல்கள்
ஆந்திராவிலிருந்து தரமற்ற எம்-சாண்ட் மணல்கள் தமிழகத்திற்குள் வருவதை தடுத்து நிறுத்தி முறைகேடாக செயல்படும் அனைத்து அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆந்திராவின் தரமற்ற எம்-சாண்ட் கும்மிடிப்பூண்டி, சத்தியவேடு, பெரியபாளையம், திருத்தணி, ஊத்துக்கோட்டை வழியாகத்தான் வருகிறது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் நிறுவப்பட்ட சர்வதேச நவீன சோதனை சாவடி தயார் நிலையில் இருந்தும் அது பயன்பாட்டிற்கு செயல்படாமல் உள்ளது.
அதில், அதிக பாரத்தை துல்லியமாக காட்ட கூடிய கருவிகள் உள்ளது. அதனை உடனேயே உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனசேகரன், தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி நல சங்க தலைவர் நாராயணன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் தீனன், திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
Related Tags :
Next Story