ஓடைக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


ஓடைக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2021 11:04 PM IST (Updated: 16 Nov 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே பாலம் அமைக்க கோரி, ஓடைக்குள் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாம்பு ஒன்று தண்ணீரில் வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ளது நாவலூர் கிராமம். இங்கு நாவலூர் - சாத்தன்நத்தம் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் வழியாக தான் அந்த பகுதி மக்கள் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. 

ஓடைக்குள் இறங்கி போராட்டம்

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா பேரின்பன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  நேற்று  தரைப்பாலம் பகுதிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், ஓடையில் ஓடும் தண்ணீரின் உள்ளே இறங்கி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 அப்போது, இங்கு பாலம் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம் அதுவரையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி, கோஷங்களை எழுப்பினர்.
4 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டம் பற்றி அறிந்த தாசில்தார் தமிழ்செல்வி, மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி,  திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

திடீரென புகுந்த பாம்பு

அப்போது தாசில்தார் தமிழ்செல்வி தரைப்பாலத்தில் நின்றபடி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரில் இருந்து வெளியே வருமாறு கூறினார். அப்போது, ஓடை தண்ணீரில் பாம்பு ஒன்று போராட்டக்காரர்களை நோக்கி வந்தது. இதை பார்ததும் தாசில்தார் தமிழ்செல்வி உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 
உடன், அவர்களை உடனடியாக கரைக்கு வந்துவிடுங்கள் என்று தாசில்தார் கூறினார். ஆனால்  அவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே அந்த பாம்பு, அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டது. இதன் பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு, ஓடையின் உள்ளே இறங்கி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, உங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரியிடம் தெரிவித்து உடனடி தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு தண்ணீரில் இருந்து கரைக்கு திரும்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story