கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகை திருட்டு
ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிய கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியலையும் தூக்கி சென்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை நிர்வகித்து வந்த, நாச்சியார்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாராமன் மகன் முகிலன் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கோவில் பூஜைகள் முடிந்த பின்னர், கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை 6 மணிக்கு கோவிலை திறக்க முகிலன் வந்தார். அப்போது, கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்து. உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலியை காணவில்லை. மேலும் கோவில் உண்டியலும் திருடு போயிருந்தது.
பள்ளியில் கிடந்த உண்டியல்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஊர்மக்களிடம் கூறினார். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து உண்டியலை தேடி பார்த்த போது, கோவிலுக்கு அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதேபோல் கோவில் விளக்குகளும் அங்கு கிடந்தன.
இதன் மூலம் அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிய கொள்ளையர்கள் உண்டியலை அங்கிருந்து பள்ளி வளாகத்துக்கு தூக்கி வந்து, அங்கு வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் காணிக்கை பணம் இருந்து இருக்கும் என்று கோவில் நிர்வாக தரப்பில் தெரிவித்தனர்.
வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து மோப்பம் பிடித்து, கானூர் சாலையில் உள்ள ஏரிக்கரை வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story