பெருந்துறை அருகே சோகம்: 7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை- இளைய மகள் மாயமானதால் விபரீத முடிவு
பெருந்துறை அருகே இளைய மகள் மாயமானதால் 7 வயது சிறுமியை கொன்று விட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.
பெருந்துறை
பெருந்துறை அருகே இளைய மகள் மாயமானதால் 7 வயது சிறுமியை கொன்று விட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருத்து வேறுபாடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மடத்துப்பாளையம் கோட்டைக்காட்டை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி மல்லிகா என்கிற சரஸ்வதி (வயது 57). இந்த தம்பதிக்கு அமுதா (வயது 35), மற்றும் 31 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் பட்டதாரிகள்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சின்னச்சாமி இறந்து விட்டார். அதன்பின்னர் அமுதாவுக்கும், ஈரோடு திண்டல் அருகே உள்ள அத்தப்பம்பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் ஆன 40 நாட்களிலேயே அமுதாவிற்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அமுதா கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
ஆசிரியை
இது நடந்து 10 மாதங்களுக்குப் பிறகு அமுதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தனன்யா என்ற பெயர் வைத்த அமுதா தாய் மல்லிகாவுடனே வசித்து வந்தார். விஜயமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். 7 வயதான தனன்யா அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்கொலை முடிவு
இந்தநிலையில் 31 வயதான மகளுக்கு திருமணம் செய்ய தாய் மல்லிகாவும், அக்காள் அமுதாவும் ஏற்பாடு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதற்காக, வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியும் நடந்து வந்தது.
ஆனால் நேற்று முன்தினம் 31 வயதான மகள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும், யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த மல்லிகாவும், அமுதாவும் மனமுைடந்து கேவலமாகிவிட்டதே இனி வாழ்ந்து என்ன பயன்? என்று தற்கொைல செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.
உறவினருக்கு தகவல்
இருவரும் இறந்துவிட்டால் குழந்தை தனன்யாவின் கதி என்ன ஆவது?, யார் காப்பாற்றுவார்கள்? என்று நினைத்தார்கள். அதனால் குழந்தையை கொன்றுவிட்டு, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மல்லிகா தன்னுடைய உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு, எங்களுக்கு கேவலமாகிவிட்டது. அனைவரும் சாகப்போகிறோம் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
போலீசாருக்கு தகவல்
இதையடுத்து பதறிப்போன உறவினர் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு கோட்டைக்காட்டில் உள்ள மல்லிகா வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்படாமல் சாத்தியிருந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது ஒரு அறையில் ஒரே கயிற்றில் அமுதாவும், குழந்தை தனன்யாவும் பிணமாக தூக்கில் தொங்கினார்கள். மற்றொரு அறையில் மல்லிகா தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
இதையடுத்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதேபோல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம்கோயல் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
அதன்பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
விசாரணை
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தனன்யாவை பாட்டி மல்லிகாவும், தாய் அமுதாவும் சேர்ந்து தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு, பின்னர் அதே கயிற்றில் அமுதாவும், மற்றொரு அறையில் மல்லிகாவும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.
எனினும், குழந்தையை கொன்றுவிட்டு, தாயும்-பாட்டியும் தற்கொலை செய்து செய்துகொண்டதற்கு 31 வயதான அவரது மகள் வீட்டைவிட்டு சென்றதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story