மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு


மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 2:13 AM IST (Updated: 17 Nov 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நேரடி தேர்வு
மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 பருவத்துக்கான தேர்வையும் மாணவ-மாணவிகள் ஆன்லைனில் எழுதினார்கள். இந்தநிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் தேர்வை பல்கலை கழகம் ரத்து செய்தது. மேலும் வழக்கம்போல் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று அறிவித்தது. 
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் எழுமாத்தூர் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் எழுமாத்தூர் பஸ்நிறுத்தத்தில் ஒன்று திரண்டார்கள். பின்னர் ஆன்லைனில்தான் மீண்டும் கல்லூரி தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவ, மாணவிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மாணவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி வந்தோம். தற்போது உடனடியாக நேரடி தேர்வு எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் நாங்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களுக்கு இந்த ஒரு முறை ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்றார்கள்.
அதற்கு போலீசார் இதுகுறித்து மாவட்ட கலெக்டர், பல்கலை கழக அதிகாரிகள், கல்லூாி முதல்வரிடம்தான் நீங்கள் கோரிக்கை அளிக்கவேண்டும் என்று கூறினார்கள். 
இதையடுத்து மாணவ-மாணவிகள் கலைந்து சென்றார்கள். இதனால் சுமார் 30 நிமிடம் ஈரோடு-முத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story