58 கிராம கால்வாயில் பொங்கல் வைத்து வைகை நீரை வரவேற்ற கிராம மக்கள்
58 கிராம கால்வாயில் பொங்கல் வைத்து வைகை நீரை கிராம மக்கள் வரவேற்றனர். இதில் அ.தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி
58 கிராம கால்வாயில் பொங்கல் வைத்து வைகை நீரை கிராம மக்கள் வரவேற்றனர். இதில் அ.தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
58 பானையில் பொங்கல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 58 கிராம கால்வாயில் கடந்த 13-ந் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது உசிலம்பட்டி தாலுகா உத்தப்பநாயக்கனூர் அருகிலுள்ள வலது இடது கால்வாய் பிரியும் இடத்தில் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு கண்மாய்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதைதொடர்ந்து உத்தப்பநாயக்கனூர் அருகில் இரண்டு கால்வாய்களும் பிரியும் இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.அய்யப்பன் முன்னிலையிலும் பெண்கள் 58 பானையில் பொங்கல் வைத்து தண்ணீரை வணங்கி வரவேற்று வழிபட்டனர். இதில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் பண்பாளன், சுதாகரன், மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் ரகு, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் முன்னாள் நகர செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
மலர் தூவி வரவேற்பு
அதன் பின்னர் 58 கிராம கால்வாய் வந்த தண்ணீரை அ.தி.மு.க.வினரும், விவசாயிகளும் மலர்தூவி வரவேற்றனர். இதில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜான்சன், பெருமாள், சின்னதேவர், தமிழ்செல்வன், சின்னயோசனை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, 58 கிராம கால்வாய் அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியவுடன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் தமிழக அரசு 69 அடியை எட்டும் வரை காத்திருந்து காலதாமதமாக தண்ணீர் திறந்து விட்டது. இது இப்பகுதி விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 62 அடியை எட்டியவுடன் தண்ணீர் திறந்துவிட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி தண்ணீரை தேக்க கேரளாவுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஜெயலலிதா போராடி பெற்ற உத்தரவு வீணாகி விடும். எனவே தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தின் அளவை குறைய விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள் என்றார். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story