கூலித்தொழிலாளி இறந்த வழக்கில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்


கூலித்தொழிலாளி இறந்த வழக்கில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:00 PM GMT (Updated: 16 Nov 2021 9:00 PM GMT)

கூலித்தொழிலாளி இறந்த வழக்கில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூரைச்சேர்ந்த சுமன் ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய சகோதரர் சுரேஷ்குமார் (வயது 27). கட்டிட கூலி வேலை பார்த்து வந்தார். கல்லூரியில் படித்தபோது, அவரும் உடன் படித்த காட்டுப்புதூரைச் சேர்ந்த தங்கநீலாவும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை அறிந்த பெண்ணின் பெற்றோர், வேறொருவருடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்காக கடந்த 7-ந்தேதி போலீஸ் நிலையம் செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் காட்டுப்புதூர் ஆலடி சிவன் கோவில் தெப்பக்குளம் அருகே காயங்களுடன் மயங்கி நிலையில் கிடந்தார்.
அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். ஆனால் போலீசார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையை தர மறுக்கின்றனர். எனவே அவரின் உடலை மருத்துவ குழு அமைத்து மறுபிரேத பரிசோதனை செய்யவும், அவரது இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, சுரேஷ்குமாரின் உடல் பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினரிடம் வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், மனுதாரர் சகோதரர் ஒரு கடையில் பூச்சி மருந்து வாங்குவது குறித்த கேமரா பதிவுகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த பதிவுகளை மனுதாரர் மற்றும் குடும்பத்தினரிடம் காண்பிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். முடிவில், இந்த வழக்கு குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Next Story