பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 11:02 PM IST (Updated: 17 Nov 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 916 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.67 அடியாக இருந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. 
நேற்று மாலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 538 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 103.92 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

Next Story