சத்தி ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு


சத்தி ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 17 Nov 2021 11:10 PM IST (Updated: 17 Nov 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சத்தியமங்கலம் ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குத்தியாலத்தூர் மற்றும் கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று சென்றார்.
அப்போது அவர் குத்தியாலத்தூர் பள்ளம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், சக்கரைபள்ளம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மாக்கம்பாளையம் பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட சுமார் 5 வீடுகள் உள்பட மொத்தம் ரூ.9 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விவசாயிகள்
மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் 70 சதவீத மானியத்துடன் சூரியசக்தி மின்மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலுக்கு தேவையான தண்ணீரை மேல்நிலைத்தொட்டி, திறந்தவெளிகிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தும் வகையில் மாநில அரசின் மானியமாக 40 சதவீதமும், ஒன்றிய அரசின் மானியமாக 30 சதவீதமும் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக 30 சதவீதத்துடன் பாரத பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 33 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.87 லட்சத்து 75 ஆயிரம் மானியம் பெற்று பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

Related Tags :
Next Story