லஞ்சம் வாங்கியபோது கைதான வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை
ஈரோட்டில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
ஈரோட்டில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
ரூ.1000 லஞ்சம்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்தபோதே சுப்பிரமணி இறந்து விட்டார். சம்பந்தப்பட்ட துறையில் இருந்து குடும்பத்துக்கு நிதி பெற விண்ணப்பித்தபோது வாரிசு சான்றிதழ் தேவை என தெரிவித்தனர்.
எனவே சுப்பிரமணியின் வாரிசுதாரர்களான மனைவி ராஜேஸ்வரி மற்றும் 3 மகன்கள் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். இது தொடர்பான விசாரணை 2013-ம் ஆண்டு நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு உள்வட்ட கிராம வருவாய் ஆய்வாளராக மனோகரன் என்பவர் இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வழங்க வேண்டும் என்று வருவாய் ஆய்வாளர் மனோகரன் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால், ராஜேஸ்வரி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1000-த்தை கடந்த 28-11-2013 அன்று வழங்கினார். அதை வருவாய் ஆய்வாளர் மனோகரன் வாங்கிய போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை லஞ்சப்பணத்துடன் பிடித்தனர்.
தீர்ப்பு
இதுதொடர்பாக அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்். இந்த வழக்கு காரணமாக மனோகரன் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈரோடு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை தலைமை மாஜிஸ்திரேட்டு புஷ்பராணி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், வருவாய் ஆய்வாளர் மனோகரன் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக அவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க அந்த தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு கூறி இருந்தார்.
2 ஆண்டு ஜெயில்
எனவே வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என்று அந்த தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு புஷ்பராணி கூறி இருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு வக்கீல் செந்தில்குமார் ஆஜர் ஆனார். தண்டனை பெற்ற மனோகரன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். மேலும், அவர் உடனடியாக ஜாமீன் பெற்றதால் ஜெயிலில் அடைக்கப்படவில்லை.
Related Tags :
Next Story