தொழில்அதிபர் வீட்டில் ரூ.54 லட்சம் நகை, பணம் திருட்டு


தொழில்அதிபர் வீட்டில் ரூ.54 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 Nov 2021 2:45 AM IST (Updated: 18 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தொழில்அதிபர் வீட்டில் ரூ.54 லட்சம் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான நேபாள நாட்டு காவலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:பெங்களூருவில் தொழில்அதிபர் வீட்டில் ரூ.54 லட்சம் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான நேபாள நாட்டு காவலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ரூ.54 லட்சம் மதிப்பு

பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பனஹள்ளி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர், தொழில்அதிபர் ஆவார். நேற்று முன்தினம் காலையில் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே புறப்பட்டு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணத்தை திருடி சென்று விட்டார்கள்.

இந்த நிலையில், வெளியே சென்றிருந்த ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவின் கதவு திறந்துகிடந்தது. பீரோவில் இருந்த ரூ.47 லட்சம் மற்றும் 150 கிராம் தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.54 லட்சம் ஆகும்.

காவலாளிக்கு வலைவீச்சு

இதுபற்றி பானசாவடி போலீசாருக்கு, ஸ்ரீதர் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீதர் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது அதில் பதிவாகி இருந்த அனைத்து காட்சிகளும் அழிக்கப்பட்டு இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவும் செயல்படாத வண்ணம் ஆப் செய்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஸ்ரீதர் வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் அவரே திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட காவலாளியை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story