போராட்டத்திற்கு முயன்ற 300 மாணவர்கள் கைது
போராட்டத்திற்கு முயன்ற 300 மாணவர்கள் கைது ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி மதுரையில் போராட்டத்திற்கு வந்த சுமார் 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி மதுரையில் போராட்டத்திற்கு வந்த சுமார் 300 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆர்ப்பாட்டம் செய்த 750 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை கல்லூரிகளில் நேரடியாக எழுத வேண்டும் என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் வகுப்புகளை தற்போது வரை ஆன்லைனில் நடத்தி விட்டு தேர்வுகளை மட்டும் நேரடியாக நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரசின் உயர்கல்வித்துறை கண்டிப்பாக மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
750 மாணவர்கள் மீது வழக்கு
நேற்று முன்தினம் மதுரை நகரில் அழகர்கோவில் சாலை, தமுக்கம், பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, பசுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 750 மாணவ-மாணவிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில் நேற்று கல்லூரி மாணவர்கள் அனைவரும் மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் வெளியாகியது. மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் விளையும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
300 பேர் கைது
அதையொட்டி மதுரையில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் தமுக்கம், பெரியார் பஸ்நிலையம், பசுமலை, திருப்பரங்குன்றம் சாலை மற்றும் வணிக வளாகம் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் நேற்று குவிக்கப்பட்டு இருந்தனர். அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் இந்த பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதையும் மீறி அங்கு வந்த மாணவ, மாணவிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள வணிக வளாக பகுதி மற்றும் தமுக்கம், கே.கே.நகர் பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story