மதுரையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை


மதுரையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 17 Nov 2021 9:36 PM GMT (Updated: 17 Nov 2021 9:36 PM GMT)

மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை கடைகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.

மதுரை
மதுரை மார்க்கெட்டுகளில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை கடைகளில் கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.
தொடர் மழை
மதுரையை பொறுத்தமட்டில் மாட்டுத்தாவணி மற்றும் பரவை மார்க்கெட்டுகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதன்பின்னர், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு காய்கறிகள், லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தொடர் மழைக்காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கணிசமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. 
மதுரை மொத்த மார்க்கெட்டுகளில் நேற்று ஒரு கிலோ தக்காளியானது  ரூ.70 வரை விற்பனையானது. சில்லரையாக ரூ.100 வரை மதுரையில் விற்பனையானது.
காய்கறி விலை
இதுபோல் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60 முதல் ரூ.90-க்கு விற்பனையானது. கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.30-ரூ.40, பட்டர் பீன்ஸ் ரூ.130, சோயா பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.90, ஜெர்மன் பீன்ஸ் ரூ.60, முருங்கை பீன்ஸ் ரூ.80, முள்ளங்கி ரூ.80, நூக்கல் ரூ.50, முருங்கை ரூ.80 முதல் ரூ.100, 
பீர்க்கங்காய் ரூ.100, சவ்சவ் ரூ.20, சிறிய பாகற்காய் ரூ.250, உருட்டு மிளகாய் ரூ.40, பஜ்ஜி மிளகாய் ரூ.70, கொடை மிளகாய் ரு.110, கலர் கொடைமிளகாய் ரூ.200, சேனை கிழங்கு ரூ.30, கருணை கிழங்கு ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30, காலிபிளவர் (ஒன்று) ரூ.20 முதல் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.30, அவரை ரூ.60, முட்டை கோஸ் ரூ.20 முதல் ரூ.25, வாழைக்காய் (ஒன்று) ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மார்க்கெட்டுகள் மதுரையில் தான் உள்ளன. இங்கிருந்து தான் தென்மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
சின்னவெங்காயம்
தற்போது தொடர் மழைக்காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கனமழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் தக்காளியையே பெரும் அளவில் நம்பி இருக்கிறோம்.
சின்ன வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. அதன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காய்கறிகள் அழுகி விடும் என்பதால் பதுக்கி விற்பனை செய்ய முடியாது. மழையின் காரணமாகவே விலை அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே பொங்கல் பண்டிகை முடியும் வரை காய்கறிகளின் விலை அதிகரிக்கும்" என்றனர்.

Next Story