தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்லும் 12 டி.எம்.சி. தண்ணீர்; தடுப்பணை கட்டி தேக்கி வைக்க விவசாயிகள் கோரிக்கை


தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு  வீணாக செல்லும் 12 டி.எம்.சி. தண்ணீர்; தடுப்பணை கட்டி தேக்கி வைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2021 2:08 AM IST (Updated: 19 Nov 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
விவசாயம்
தாளவாடி தாலுகா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. 70 சதவீதம் பேர் விவசாயிகளாகவும், மீதமுள்ள 30 சதவீதம் பேர் விவசாய கூலி தொழிலாளர்களாகவும் உள்ளார்கள். இந்த பகுதிகளில் மழைநீரை மட்டும் நம்பியே விவசாயம் நடக்கிறது. ஆற்றுநீர் பாசனம் கிடையாது. இதனால் ஆழ்குழாய் கிணறு மூலமாக விவசாயம் செய்யப்படுகிறது. 
கோடை காலத்தில் தாளவாடி மலைக்கிராமங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்காத நிலை உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் 500 அடியில் இருந்து 1,200 அடி வரை அதலபாதாளத்துக்கு சென்றது.
12 டி.எம்.சி.
மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லாததால் மலைக்கிராம மக்கள் வறட்சி காலத்தில் பெரும் துயரத்தை சந்திக்கின்றனர். தாளவாடியில் ஆண்டுதோறும் 600 மி.மீட்டர் முதல் 800 மி.மீட்டர் வரை மழை அளவு உள்ளது. இந்த தண்ணீர் முழுவதும் ஓடையின் வழியாக வீணாக சென்றுவிடுகிறது. 
சுமார் 8 டி.எம்.சி. முதல் 12 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்கிறது. தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக பையனாபுரம், திகனாரை, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, தாளவாடி வழியாக கர்நாடக மாநில சிக்கலோ அணைக்கும், ஆசனூர், கெத்தேசால், கேர்மாளம் ஆகிய வனத்தில் பெய்யும் மழைநீர் சொர்ணாவதி அணைக்கும் செல்கிறது. அங்குள்ள 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
தடுப்பணைகள்
வீணாக செல்லும் மழைநீரை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஓடைகளில் தடுப்பணைகள் கட்டுவதற்கு வசதியாக உள்ள பகுதியை தேர்வு செய்து, புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கான திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அரசுக்கு கோரிக்கை
தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த பகுதியில் மக்காச்சோளம், ராகி, மஞ்சள், கரும்பு, தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். தாளவாடி பகுதியில் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டு இருந்தாலும், போதுமான நீர் தேக்கம் இல்லாததால் கனமழை பெய்யும்போது மழைநீர் வீணாக சென்றுவிடுகிறது. 
மழைநீரை சேமித்து வைக்கும் திட்டம் முறையாக நிறைவேற்றப்பட்டால், கோடை காலத்திலும் விவசாயத்துக்கு போதுமானதாக தண்ணீர் கிடைக்கும். இதற்காக தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் மழைநீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் வகையில் பெரிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story