நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னிமலை
நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஒரத்துப்பாளையம் அணை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. சுமார் 40 அடி உயரமுள்ள இந்த அணையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 12 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை நிரந்தரமாக தேக்கி வைக்க அனுமதி இல்லை என்பதால் படிப்படியாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 8 அடியாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியான திருப்பூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 10 அடி உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது.
போக்குவரத்து தடை
நேற்று பகல் 2 மணிஅளவில் அணைக்கு வினாடிக்கு 1,257 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக 570 கனஅடி வீதம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுங்கும், நுரையுமாக நொய்யல் ஆற்றில் செல்கிறது. அணைக்கு முன்புறம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் தார் சாலையை உரசியபடி தண்ணீர் சென்றது. இதனால் அந்த வழியே பஸ், கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு இருந்ததால் காமாட்சிபுரம், கீரனூர், காங்கேயம் உள்ளிட்ட ஊர்களுக்கும், அதேபோல் அந்த பகுதிகளில் இருந்து ஒரத்துப்பாளையம் பகுதிக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் பாதை அடைக்கப்பட்டதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நொய்யல் ஆற்றில் அதிகஅளவில் செல்வதால் கரையோர பகுதி மக்களுக்கு வருவாய் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல் ஆற்றங்கரையோர பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். நேற்று அணைக்கு வந்த தண்ணீரில் இதுவரை இல்லாத வகையில் 670 டி.டி.எஸ் என்ற அளவில் உப்புத்தன்மை குறைவாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story






