நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணை 104 அடியை எட்டியது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் 104 அடியை எட்டியது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 321 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.92 அடியாக இருந்தது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 297 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரி நீராக 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் உபரி நீராக வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீரும் என மொத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 600 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 104.21 அடியாக இருந்தது. அணையில் உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அத்தாணி
அத்தாணி பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுகின்றன. இதனால் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதிகளில் ஆப்பக்கூடல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story