கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகத்தின் கீழ் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள தீப தூணில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி. நேற்று திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே இந்து முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள் அரசுராஜா, முத்துக்குமார், முருகானந்தம், பக்தன் உள்பட பலர் கலந்து கொண்டு மலை உச்சியில் உள்ள தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.
ஊர்வலம்
முன்னதாக 16 கால் மண்டபம் அருகிலிருந்து ஜி.எஸ்.டி.ரோடு வழியே சன்னதி தெருவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதில் தெய்வ உருவ வேடம் அணிந்து பலர் பங்கேற்றனர். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம் தப்பாட்டத்துடன் ஜோதி கொண்டுவரப்பட்டது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும்போது, திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள கோவில் மண்டபம் மீட்கப்பட வேண்டும். மலையில் காசிவிசுவநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையே அங்கு தீபம் ஏற்றுவோம் என்றார்
246 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள், வெளிநபர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்து முன்னணியினர் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றபோவதாக கூறி புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களை மலைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி 246 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story