பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2021 5:48 PM IST (Updated: 19 Nov 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த வாரங்களில் பாலாறு மற்றும் செய்யாறு வடிநில பகுதியில் பெய்த பலத்த மழையினால் மேற்புறம் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

நேற்று காலை முதல் பெய்து வரும் கன மழையினால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டிலிருந்து 20,000 கனஅடி உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் நேற்று காலை 10 மணி நிலவரப்படி உத்திரமேரூர் வட்டம் வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் 12,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் இவ்விரு ஆறுகளிலும் அதிக நீர் செல்லும் என்பதாலும் மேலும் இந்த 2 ஆறுகளில் செல்லும் வெள்ள நீரானது தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மேலும் அதிகரிக்க கூடும் என்பதாலும் இவ்வாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்க காஞ்சிபுரம், உத்திரமேரூர், மற்றும் வாலாஜாபாத் தாசில்தார் சம்பந்தப்பட்ட காவல் துறையினருடன் இணைந்து முன்எச்சரிக்கை விடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதிப்புகள் குறித்த அறிக்கையினை சம்பந்தப்பட்ட தாசில்தார், காஞ்சீபுரம், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் தாசில்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும். மேலும், வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story