காஞ்சீபுரம் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நெசவாளர்கள் அவதி; நிவாரணம் வழங்க கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், நெசவாளர்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நெசவுத்தொழில் பாதிப்படைந்தது. நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல இடங்களில், தொடர்மழை பெய்து வருகிறது. கோவில் நகரம், பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சீபுரத்தில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்கள் ஈடுபடும் தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது.
இந்த நிலையில் தொடர்மழை காரணமாக காஞ்சீபுரத்தில் பெரியார் நகர், தாட்டிதோப்பு, சின்ன அய்யங்குளம், பிள்ளையார்பாளையம், சின்னகாஞ்சீபுரம், புஞ்சையரசந்தாங்கல் உள்ளிட்ட நெசவாளர் குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் நெசவாளர்களுக்கு வழங்கிய பெரும்பாலான வீடுகள் தற்போது பலமிழந்து, சுவர் முழுவதும் விரிசல் அடைந்து, கதவுகள் பெயர்ந்த நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
மழைநீர் புகுந்தது
தற்போது பெய்து வரும் தொடர்மழையால் வீட்டின் மேற்கூரை வழியாகவும், பிளவுபட்ட சுவர்களின் வழியாகவும் மழைநீர் புகுந்துள்ளது.
நெசவாளர்கள் நாள் முழுவதும் தறியில் கால் வைத்து வேலை பார்த்தாலும் குறைந்த பட்சமாக ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.500 மட்டுமே கூலியாக பெறுகின்றனர்.
இவ்வாறு உள்ள நிலையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் கைத்தறியின் அனைத்து உபகரணங்களுமே, மரத்தால் செய்யப்பட்டுள்ளதால், ஈரப்பதம் காரணமாக, நெசவு உபகரணங்கள் ஒத்துழைப்பின்றி, பணிகள் முடங்கியதால் போதிய வருமானமின்றி தவித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தந்த கைத்தறி சங்கங்களின் நிர்வாகத்திற்கிடையே இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நிவாரணம் வழங்க...
ஆபத்தான நிலையில் வசிக்கும் நெசவாளர்களின் குடியிருப்புகளை புனரமைத்து தர கோரியும், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மழையால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story