தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
குவிந்து கிடக்கும் குப்பை
அந்தியூர் டவுன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை சுற்றியும், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறமும் கடந்த பல மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மழைக்காலம் என்பதால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் உற்பத்தியாகியுள்ளன. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சின்னண்ணன், அந்தியூர்.
குழி மூடப்படுமா?
கோபி டவுன் அக்ரகாரம் கிருஷ்ணன் வீதியில் கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் ஒரு குறுகிய இணைப்பு சாலை வருகிறது. இந்தச் சாலையில் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரோட்டின் ஒரு பக்கத்தில் சாக்கடை கழிவுநீர் செல்ல 2 இடங்களில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் குழி மூடப்படாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும்போது பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் நிரம்பினால் குழிகள் இருப்பது தெரியாமல் போகும். இதனால் பேராபத்து ஏற்படும். உடனே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
அகற்றப்படாத சாக்கடை கழிவு
ஈரோடு, சிந்தன் நகர் பகுதியில் ஒரு மாத காலமாக தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு வெளியேற்றப்படாமலும், தெரு குப்பைகள் அள்ளப்படாமலும் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார நலன் கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளையும், தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிந்தன்நகர்.
விபத்து ஏற்படும் அபாயம்
ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட 4 ரோடு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள், விறகுகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பவானி சாலையில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆப்பக்கூடல்.
தெருவிளக்குகள் ஒளிருமா?
ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 256 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் விளக்குகள், தெருவிளக்குகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒளிர்வதில்லை. இதனால் சிறுவர்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். மேலும் மழைக்காலம் என்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே உடனே தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாஸ்பிரவின், பாரதிநகர், முத்தம்பாளையம் பகுதி.
தரமில்லாத தார் சாலை
அந்தியூர் தாமரைகரையில் இருந்து தேவர்மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ரோட்டின் இரு பகுதியிலும் மூங்கில் புதர்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள மூங்கில் புதர்களை அகற்றவும், குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
பாலு, தாமரைக்கரை.
Related Tags :
Next Story