ஈரோடு மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது


ஈரோடு மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 20 Nov 2021 2:16 AM IST (Updated: 20 Nov 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
சென்னிமலை
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று  சென்னிமலை முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்க்கண்டேஸ்வரர் சன்னதி முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் சென்னிமலை அருகே உப்பிலிபாளையத்தில் உள்ள அணி ரங்க பெருமாள் கோவிலில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், பேட்டை பெருமாள் கோவில், செல்லீஸ்வரர் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், சந்தியபாளையம் மாரியம்மன் கோவில் உள்பட அந்தியூரை சுற்றியுள்ள கோவில்களில் தீபங்கள் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு கோலங்கள் போட்டு, தீபங்கள் ஏற்றி வைத்திருந்தனர். மேலும் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கைலாய வாத்தியங்கள் முழங்க அண்ணாமலையார் திருவீதி உலா நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கருட கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், பாசூர், கருமாண்டாம்பாளையம், வடக்கு புதுப்பாளையம், தாமரைப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி வைத்தனர்.இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர் கோவில், நஞ்சை காளமங்களம் குல விளக்கு அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு சென்ற விளக்குகளில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு சென்றனர்.
கோபி
கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவில், கிருஷ்ணன் வீதியில் இணைப்பு சாலையில் உள்ள காட்டு கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பவானி
பவானியில் சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையிலுள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story