கூடுவாஞ்சேரியில் தனியார் பள்ளி ஆக்கிரமித்து இருந்த ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு


கூடுவாஞ்சேரியில் தனியார் பள்ளி ஆக்கிரமித்து இருந்த ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 4:41 PM IST (Updated: 20 Nov 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரியில் தனியார் பள்ளி ஆக்கிரமித்து இருந்த ரூ.25 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக நின்னைக்கரை, பொத்தேரி, தைலாவரம் போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அப்படி ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் மீனாட்சி நகரில் உள்ள நீர்வரத்து கால்வாய் மூலம் கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்கிறது.

இதற்கிடையே மீனாட்சி நகரில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களை கட்டி இருந்தது.

இதேபோல கால்வாயை ஆக்கிரமித்து 9 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக கனமழை பெய்யும்போது இந்த கால்வாய் வழியாக மழைநீர் செல்ல முடியாத காரணத்தால் மீனாட்சி நகர் பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி அப்படியே நிற்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுக்களை அளித்தனர்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவுபடி தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நேற்று ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அதிகாரிகள் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் பகுதியிலுள்ள நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமித்து தனியார் பள்ளி கட்டியிருந்த சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் உடனடியாக கால்வாய் தோண்டி கரை அமைக்கும் பணிகளிலும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து தனியார் பள்ளி கட்டியிருந்த சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதே நீர்வரத்து கால்வாய்யை ஆக்கிரமிப்பு செய்து 9 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கி அந்த வீடுகளையும் அகற்றும் பணி விரைவில் தொடங்கும், தற்போது மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி, நீர்வரத்து கால்வாயின் மொத்த ஆக்கிரமிப்பு இடத்தின் அளவு ஒரு ஏக்கர் ஆகும்.

இவ்வாறு வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தெரிவித்தார்.

அப்போது அவருடன் பொதுப்பணித் துறை, வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் இரவு எங்களுக்கு நோட்டீஸ் வழங்கி நேற்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். எங்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. ஆகையால் இது குறித்து நாங்கள் கோர்ட்டை அணுக உள்ளோம்.

இவ்வாறு பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story