புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 7:42 PM IST (Updated: 20 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தரையில் திடீர் பள்ளம்

கோத்தகிரி கோர்ட்டு மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அதன் வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் நுழைவு வாயில் பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் தவறி விழுந்து காயமடையும் நிலை இருக்கிறது. எனவே உடனடியாக தரைத்தளத்தை சீரமைக்க வேண்டும்.

நாகராஜ், கோத்தகிரி.

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

கோவை பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தற்போது சுரங்கப்பாதை இல்லாததால் பொதுமக்கள் மேம்பாலத்தின் மீது மட்டுமே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

வெள்ளிங்கிரி, பீளமேடு.

தேங்கும் மழைநீரால் அவதி

கோவையில் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் பஸ் நிறுத்தத்தில் மழைநீர் அடிக்கடி தேங்கி விடுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுமா?.

கார்த்திகா, புலியகுளம்.

தெருநாய்கள் தொல்லை(படம்)

கோவை-அவினாசி சாலையில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் மசக்காளிபாளையம் சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. இது தவிர வாகனங்களில் அடிபட்டு நாய்களும் உயிரிழக்கின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

சிவா, சிங்காநல்லூர்.

தொற்று நோய் பரவும் அபாயம்

பேரூர் அருகே மாதம்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் புதர் செடிகள் வளர்ந்து மண் மூடி கால்வாய் இருந்த இடம் தெரியாமலேயே மாறிபோய்விடும் நிலை உள்ளது. மேலும் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வன், மாதம்பட்டி.

கால்நடைகள் தொல்லை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, பழ கழிவுகள் சேகரமாகிறது. இதை தின்பதற்காக கால்நடைகள் வந்து செல்கின்றன. மேலும் கடைகளுக்கு முன்பு கால்நடைகள் நடமாடுவதால் சிறுவர்களுடன் வந்து செல்லும் பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் பொருட்கள் வாங்கும் மக்களை தள்ளி விட்டு செல்வதால் லேசான காயத்துடன் தப்புகின்றனர். எனவே மார்க்கெட்டுக்குள் கால்நடைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபியுல்லா, அப்பர்பஜார், ஊட்டி

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி மணிக்கூண்டில் இருந்து ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு பஸ்கள் திரும்பி செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சாலையோரத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை முறையாக நிறுத்த வேண்டும்.

கெத்சி, பாம்பேகேசில், ஊட்டி.

குண்டும், குழியுமான சாலை

கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லியில் இருந்து பேபிநகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பிட்ட தூரம் மட்டுமே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைத்து உள்ளனர். மீதமுள்ள இடங்கள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முழுமையாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல்லா, மச்சிகொல்லி.

வேகத்தடை அமைக்க கோரிக்கை

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா என்ற இடத்தில் வளைவான பகுதி உள்ளது. இங்கு வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறது. சில சமயங்களில் இரவில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நடந்து செல்லும் சாலை என்பதால், விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே வளைவான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சிவன், கூடலூர்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் 

கோவை-பாலக்காடு சாலையில் இருந்து பிரிந்து குளத்துபாளையம் செல்லும் சாலை சமீபத்தில் பெய்த மழை காரணமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடையும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, கோவைப்புதூர்.

சுகாதார சீர்கேடு

உக்கடம்-செல்வபுரம் சாலையோரம் உள்ள குப்பை தொட்டி நிறைந்து குப்பைகள் வெளியே கிடக்கின்றன. இதை அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த குப்பைகள் அவ்வப்போது காற்றில் பறந்து அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூடுதலாக குப்பை தொட்டிகள் வைத்து உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.

அப்துல் ஹக்கீம், கோவை.

Next Story