தொடர்மழை காரணமாக கோவையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு


தொடர்மழை காரணமாக கோவையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 20 Nov 2021 11:00 PM IST (Updated: 20 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக கோவையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

கோவை

கோவையில் தொடர் மழை காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உழவர் சந்தை

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், வடவள்ளி, சூலூர், மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த சந்தைகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதேபோல் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் வியாபாரிகளும், அண்ணா மற்றும் டி.கே. மார்க்கெட்டிலும் பொதுமக்களும் காய்கறிகள் வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகள் அழுகி, வரத்து குறைந்து இருப்பதால் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.

தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை

ஆர்.எஸ். புரம் உழவர் சந்தையில் கடந்த 12-ந் தேதி ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி, 2 நாட்கள் கழித்து 14-ந் தேதி ரூ.48 என விலை குறைந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 

ஆனால் தற்போது தக்காளி கிலோ கிடுகிடுவென உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லரை கடைகளில், தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைக்கு போட்டியாக தக்காளி விலையும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் கிலோ ரூ.50-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.75-க்கும், ரூ.62-க்கு விற்ற நாட்டு கத்திரிக்காய் ரூ.80 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அவரைக்காய் ரூ.48, புடலங்காய் ரூ.35, பீர்க்கங்காய் ரூ.54, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.44 என் மற்ற காய்கறிகளும் சற்று விலை உயர்ந்துள்ளது
உருளைக்கிழங்கு ரூ.42, கேரட் ரூ.68, பீட்ரூட் ரூ.48, காலிபிளவர் ரூ.50-க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக காரணமாக, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் உடனே அழுகி விடுகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. 

மேலும் ஒரு சில நாட்களில் மீண்டும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதால், இந்த விலை உயர்வு மேலும் ஒரு சில வாரங்கள் நீடிக்கும் என்றார்.

Next Story