ஜவுளிக்கடையில் தீ விபத்து
ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
மதுரை
மதுரை கீழமாசிவீதி, விளக்குத்தூண் பகுதியில் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்யும் ஜவுளிக்கடை உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு இந்த கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திடீர்நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் கடையில் தீ வேகமாக பரவியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடைத்து அங்கு பரவிய தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கடைக்குள் இருந்த ரெடிமேட் ஆடைகள் தீ பற்றி வேகமாக எரிய தொடங்கியது. அதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கடையின் கதவை உடைத்தும், மாடி வழியாக கீழே வந்தும் தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் வந்தது. அதற்குள் கடைக்குள் இருந்து ரெடிமேட் ஆடைகள், பொருட்கள் ஆகியவை எரிந்து சேதமானது. கடையின் மாடிப்படி பகுதியில் இருந்த இன்வெட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story