தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 8:55 PM GMT (Updated: 20 Nov 2021 8:55 PM GMT)

தினத்தந்தி புகாா் பெட்டி

தெரு விளக்குகள் ஒளிருமா?
ஈரோடு மாநகராட்சி 34-வது வார்டுக்கு உள்பட்ட முத்தம்பாளையம் பகுதி 7-ல் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அமைந்து உள்ளன. அங்கு 256 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் மின் விளக்குகளும், தெரு விளக்குகளும் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. சிறுவர், சிறுமிகள் இரவு நேரத்தில் வீடுகளில் இருந்து வெளியில் வருவதற்கே அச்சப்படுகிறார்கள். மழைக்காலங்களில் விஷ பூச்சிகள் வெளியில் வந்தாலும் தெரிவதில்லை. எனவே எங்கள் பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை ஒளிர வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
தாஸ்பிரவின், பாரதிநகர், முத்தம்பாளையம் பகுதி-7.

இருளில் மூழ்கிய பாலம்
ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உள்ள கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். அங்கு தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. உயர்கோபுரத்தில் உள்ள 6 மின் விளக்குகளில், 2 மின் விளக்குகள் மட்டுமே ஒளிருகிறது. வாகனங்களின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி செல்ல வேண்டியுள்ளது. நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்பவர்களும் இருளில் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நுழைவு பாலத்தில் இருள் விலக தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ரவி, சோலார்.

ஆபத்தான பயணம்
ஈரோடு சோலாரில் இருந்து கரூர் செல்லும் சாலையில் பலர் குப்பைகளை கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரோட்டில் செல்லமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் சில நேரங்களில்  குப்பைகளுக்கு  தீ வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் புகை காற்றில் பறப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ள  வாய்ப்பு உள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.

சாக்கடையில் கலக்கும் குடிநீர்
ஈரோடு வாசுகி 1-வது வீதிக்கு உள்பட்ட 26-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள சாக்கடையில் வீணாக கலக்கிறது. மேலும் அதன் அருகிலேயே சாக்கடை தேங்கி நிற்பதால் ஒரு வித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வாசுகி வீதி, பொதுமக்கள்

பாதியில் நிற்கும் தார் சாலை
பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட விஜயமங்கலத்தில் சுங்கச்சாவடி  உள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு பின்புறம் அத்திமரத்தோட்டம் பகுதி முதல் விஜய் விகாஷ் பள்ளிவரை தார் சாலை முழுமையாக முடிவு பெறாமல் பாதியில் நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிற்கும் சாலையை முழுவதும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தரராஜன் விஜயமங்கலம்


குடிநீர் குழாய் உடைப்பு
கோபி தாலுகாவுக்கு உள்பட்ட கொங்கர்பாளையம் மேற்கு வீதி 4-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்கர்பாளையம், பொதுமக்கள்.

குப்பை அள்ளப்படுமா?
கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் ஓடை செல்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த ஓடையானது தூர்வாரப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது ஓடை கரையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒரு வித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளவும், அதில் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஊர்பொதுமக்கள். சாமிநாதபுரம்.

குண்டும், குழியுமான ரோடு
கோபி அருகே பெரிய மொடச்சூர் காட்டுவளவு வீதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத் தடுமாறி செல்கிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
விசு, கோபி

Next Story