சீனாபுரம் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்; சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டால் பரபரப்பு
சீனாபுரம் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த பாலியல் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெருந்துறை
சீனாபுரம் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். சமூக வலைதளத்தில் வைரலாகும் இந்த பாலியல் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் உலா
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் மீது பழைய மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விசாரணை
இந்தநிலையில் இதுபற்றி விசாரணை நடத்துமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர் சண்முகம், பெருந்துறை கல்வி மாவட்ட அதிகாரி அமுதா, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சீனாபுரம் பள்ளிக்கூடம் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து, தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதுபற்றி அறிந்ததும் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தலைமை ஆசிரியரை முற்றுகை
பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‘இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் நான் இப்போது சொல்லக் கூடாது. அதிகாரிகள் இன்னும் முழுமையாக விசாரணையை முடிக்கவில்லை. அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்’ என்றார்.
அப்போது அங்கிருந்த சீனாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.சி.சுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.வி.பாலகிருஷ்ணன் மற்றும் சிலர் கூறும்போது, ‘தற்போது இந்த பள்ளிக்கூடத்தில் படித்துவரும் மாணவிகள் யாரும் மேற்படி ஆசிரியர் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் கூறவில்லை. ஆனால் பழைய மாணவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சுமத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உங்களோடு நாங்களும் சேர்ந்து குரல் கொடுப்போம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் உலாவரும் பாலியல் குற்றச்சாட்டால் தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story